×

தனிப்பட்டா வழங்க விஏஓ லஞ்சம் கேட்டதால் விரக்தி குளத்தில் குதித்து பூ வியாபாரி தற்கொலை-பேஸ்புக் மூலம் ‘லைவ்’ வீடியோ வெளியிட்டு துணிகரம்

ஆரணி : கூட்டுப்பட்டாவில் இருந்து பிரித்து தனிப்பட்டா வழங்க விஏஓ லஞ்சம் கேட்டதாக கூறி முகநூல் பக்கம் மூலம் ‘லைவ்’ வீடியோ வெளியிட்டு பூ வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆரணி அடுத்த களம்பூர் அருகே நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவரது மகன்கள் முருகன்(45), ரமேஷ்(40), பிரபு(35). அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.  அதில் பிரபு பூ வியாபாரம் செய்து வந்தார்.  மேலும் சிவப்பிரகாசத்துக்கு சொந்தமான 3 சென்ட் வீட்டுமனையில் ஒரு பகுதியில் பிரபு தனது மனைவி சரண்யா, மகள்கள் தேவி, சுமித்ரா, மகாலட்சுமி ஆகியோருடன் வீடு கட்டி வசித்து வந்தார். மற்ற 2 பேரும் அதே ஊரில் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.இந்நிலையில் பிரபு தனது தந்தையிடம் தனக்கு கூட்டுப்பட்டாவாக உள்ள இடத்தை தனியாக பாகம் பிரித்து தனிப்பட்டாவாக வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு சிவப்பிரகாசம், அண்ணன், தம்பிகள் 3 பேரும் சேர்ந்து முடிவு செய்து தனிப்பட்டாவாக மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இப்பிரச்னையில் அண்ணன் தம்பிகளுக்குள் தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.இதையடுத்து பிரபு மற்றும் அவரது அண்ணன்கள் 2 பேரும் சேர்ந்து நடுக்குப்பம் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று தங்களது கூட்டுப்பட்டாவை பிரித்து தனித்தனிப்பட்டாவாக மாற்றித்தர வேண்டும் என்று மனு அளித்தனர். இதற்காக ஒரு மாதத்துக்கும் மேல் பிரபுவும் அவரது அண்ணன்களும் அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கூட்டுப்பட்டாவை தனிப்பட்டாக பிரித்து வழங்க ₹10 ஆயிரம் தர வேண்டும் என்று விஏஓ கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த பிரபு, நேற்று நடுக்குப்பத்தில் இருந்து விநாயகபுரம்  செல்லும் சாலையில் ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் அருகே உள்ள குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும், தற்கொலைக்கு முன்னதாக குளக்கரையில், தான் ஒரு மாதகாலமாக பூர்வீக சொத்தை பிரித்து தனித்தனி பட்டவாக வழங்க கேட்டு மனு அளித்து ஒரு மாதத்துக்கும் மேல் விஏஓவால் அலைக்கழிக்கப்பட்டதாகவும், விஏஓ கூட்டுப்பட்டாவை பிரித்து தனிப்பட்டாவாக வழங்க ₹10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும், அதனால் தற்கொலை செய்து கொள்வதாகவும், சம்பந்தப்பட்ட விஏஓ மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது தற்கொலைக்கு விஏஓதான் காரணம்’ என்று மொபைல் போனில் தனது பேஸ்புக் பக்கத்தில் லைவ் வீடியோ வெளியிட்டு அதன் பிறகு குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இவரது பேஸ்புக் லைவ் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதைப்பார்த்த பிரபுவின் குடும்பத்தாரும், நடுக்குப்பம் கிராம மக்களும் ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் அருகில் உள்ள குளத்தில் சென்று பார்த்தபோது பிரபு சடலமாக மிதந்து கொண்டிருந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் குறித்து அறிந்ததும் ஆரணி டிஎஸ்பி கோட்டீஸ்வரன் தலைமையில் களம்பூர் போலீசார் விரைந்து சென்று பிரபுவின் சடலத்தை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கேட்டபோது, ‘இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். கூட்டுப்பட்டாவில் இருந்து தனிப்பட்டா கேட்டு விஏஓவிடம் பிரபு சென்றுள்ளார். அவர் பணம் கேட்டாரா? இல்லையா? என்பது தெரியாது. அதேநேரத்தில் கூட்டுப்பட்டாவை பிரித்து சப்-டிவிஷன் செய்து தனிப்பட்டா வழங்குவதற்கு முன் அதை சர்வேயரை கொண்டு அளப்பது போன்ற நடைமுறைகள் உள்ளன. அதை பிரபுவிடம் விஏஓ தெரிவித்ததாகவே எங்களுக்கு தெரிய வந்துள்ளது.  எதுவும் விசாரணைக்கு பிறகே தெரிய வரும்’ என்றனர்….

The post தனிப்பட்டா வழங்க விஏஓ லஞ்சம் கேட்டதால் விரக்தி குளத்தில் குதித்து பூ வியாபாரி தற்கொலை-பேஸ்புக் மூலம் ‘லைவ்’ வீடியோ வெளியிட்டு துணிகரம் appeared first on Dinakaran.

Tags : VAO ,Prikana-Dave ,Facebook ,Arani ,Parikra ,Juhpatta ,Prikarna ,Dinakaran ,
× RELATED பட்டா வழங்க லஞ்சம் ஈச்சந்தா விஏஓவுக்கு நிபந்தனை ஜாமீன்